தொகுப்பூதிய பணியாளர்களாக உள்ள அனைத்து செவிலியர்களையும் தமிழ்நாடு அரசு உடனடியாகப் பணிநிரந்தரம் செய்ய வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்


30/09/2021 21:18:36 PM   மா கதிர்வேல்         384

போராடும் செவிலியரைத் தாக்கி கைது செய்கின்ற எதேச்சதிகார போக்கை கைவிடுவதோடு, தொகுப்பூதிய பணியாளர்களாக உள்ள அனைத்து செவிலியர்களையும் தமிழ்நாடு அரசு உடனடியாகப் பணிநிரந்தரம் செய்ய வேண்டும்!

– சீமான் வலியுறுத்தல்

பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற நியாயமான கோரிக்கைக்காகப் போராடிய செவிலியர்களை காவல்துறையினர் மூலம் தாக்கி, வலுக்கட்டாயமாகக் கைது செய்திருக்கும் தமிழக காவல்துறையின் எதேச்சதிகார செயல் வன்மையான கண்டனத்திற்குரியது. தொகுப்பூதிய பணியாளர்களாக உள்ள செவிலியர்களில் சொற்ப அளவில் ஒரு பகுதியினரை மட்டும் பணிநிரந்தரம் செய்துவிட்டு, மீதமுள்ள செவிலியர்களைப் படிப்படியாக பணிநீக்கம் செய்துவரும் தமிழக அரசின் வஞ்சக செயல் உயிர்காக்கும் செவிலியர்களுக்குச் செய்யும் பச்சை துரோகமாகும்.

தமிழ்நாடு மருத்துவ பணிகள் தேர்வாணையத்தின் மூலம் இரண்டு ஆண்டுகளில் பணிநிரந்தரம் செய்யப்படுவார்கள் என்ற உறுதிமொழியுடன் கடந்த 2015ஆம் ஆண்டு முதல் ஏறத்தாழ 13000 செவிலியர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணிநியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதுமட்டுமின்றிக் கொரோனோ நோய்த்தொற்றுப் பேரிடர் காலத்தில் மேலும் 4000 செவிலியர்கள் பெருந்தோற்றுத் தடுப்புப் பணிக்காக ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டனர். பணியில் சேர்ந்து ஆறாண்டுகளாகியும் பணி நிரந்தரம் செய்யாது ஒப்பந்த பணியாளர்களாகவே வைத்திருப்பது மட்டுமின்றி, அரசுப் பணியாளர்களுக்கான எவ்வித உரிமையோ, சலுகையோ வழங்காமல் மிகக்குறைந்த ஊதியமாக மாதம் ரூபாய் 7,700 மட்டுமே வழங்கி கொத்தடிமை போல் நடத்துவதென்பது எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ளவே முடியாத அரசின் உழைப்புச் சுரண்டலாகும்.

ஒப்பந்த செவிலியர்கள் தங்களது வாழ்வாதார உரிமைகளை நிறைவேற்ற வலியுறுத்திப் பல ஆண்டுகளாக, பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தும் முந்தைய அதிமுக அரசு அவர்களைக் கண்டுகொள்ளாது அலட்சியம் செய்தது. இந்நிலையில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு புதிதாகத் திமுக அரசு பதவியேற்ற பிறகு வெறும் 1,212 தொகுப்பூதிய செவிலியர்களை மட்டும் பணி நிரந்தரம் செய்துவிட்டு, மீதமுள்ள செவிலியர்களைப் படிப்படியாகப் பணிநீக்கம் செய்துவருவது வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சும் கொடுங்கோன்மை செயலாகும். எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது தேவதைகளாகவும், காக்கும் கடவுளாகவும் தெரிந்த செவிலியர்கள், தேர்தலின்போது பணி நிரந்தரம் செய்வதாக வாக்குறுதி அளித்து, அவர்களின் நம்பிக்கையைப் பெற்று முதல்வரான பிறகு, தொல்லை கொடுக்கும் தேளாகத் தெரிகின்றார்களா? பெருந்தொற்று தீவிரமாகப் பரவி மக்கள் கொத்துக்கொத்தாக உயிரிழந்து கொண்டிருந்த காலகட்டத்தில், நெருக்கடி நிலையை உணர்ந்து, அரசின் அழைப்பை ஏற்றுத் தன்னலம் விடுத்து சேவை புரிய முன்வந்த செவிலியர்களை, உறுதியளித்தபடி பணிநிரந்தரம் செய்யாமல் ஏமாற்றுவது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் மீதான நம்பகத்தன்மையை மொத்தமாகச் சீர்குலைக்கும் செயலாகும். மேலும் இரவு பகல் பாராது, தங்கள் இன்னுயிரையும் பொருட்படுத்தாது, மக்கள் சேவையில் ஈடுபட்டுவரும் செவிலியர்களைத் தேவை முடிந்தவுடன் தூக்கி எறிவதென்பது, எதிர்காலத்தில் நெருக்கடி சூழலில் சேவை புரிய எவரும் முன்வராதபடி தவறான முன் உதாரணத்தையும் ஏற்படுத்திவிடும்.

ஆகவே தமிழக அரசு இனியும் காலம் தாழ்த்தாது கடந்த மக்கள் நலன் காக்கும் அரும்பணியில் அயராது ஈடுபட்ட ஒப்பந்த செவிலியர்கள் ( பணிநீக்கம் செய்யப்பட்டவர்கள் உட்பட ) அனைவரையும் எவ்வித பாகுபாடுகளும் இல்லாமல் உடனடியாகப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். மேலும் மத்திய அரசு செவிலியர்களுக்கு வழங்கப்படுவதைப்போல இணையான ஊதியம் மற்றும் படிகள் வழங்க வேண்டும். இனிவரும் காலங்களில் தொகுப்பூதிய முறையை அறவே ரத்து செய்வதுடன் மத்திய அரசின் செவிலியர்களைப் போல் காலமுறை அடிப்படையில் பதவி உயர்வு மற்றும் தமிழக அரசு ஒப்புக்கொண்ட பதவி பெயர் மாற்ற அரசாணை ஆகியவற்றையும் வழங்க வேண்டும்.

ஒப்பந்த செவிலியர்களின் நீண்டகால நியாயமான இக்கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றித் தந்து, மக்களுக்கான மருத்துவச் சேவை தடைப்படாமல் தொடர வழிவகைச் செய்ய வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்துகிறேன். மேலும், தங்களின் வாழ்வாதார உரிமைக்காகப் போற்றுதலுக்குரிய செவிலியர்கள் முன்னெடுக்கும் போராட்டங்களுக்கு நாம் தமிழர் கட்சி தனது முழுமையான ஆதரவினை வழங்கி, கோரிக்கைகள் வெல்லும்வரை துணைநிற்கும் என்று உறுதியளிக்கிறேன்.  • செந்தமிழன் சீமான்
    தலைமை ஒருங்கிணைப்பாளர்
    நாம் தமிழர் கட்சி


 


আরও খবরঃ
For more details visit anmlive.com
Follow us at https://www.facebook.com/anmnewstamil  TAGS :        சீமான்